-
–
உத்தமர்களின் வாய்ச்சொல், சத்திய மார்க்கத்தையே
உரைக்கும்; அதன் வழி நடந்தால் நல்லதையே
அடைவோம்.
–
அரசர் ஒருவர், தேவேந்திரனை நோக்கி, பல காலம்
தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய
தேவேந்திரன், கற்பக மரத்தையே அரசருக்குக்
கொடுத்து விட்டார்.
–
கேட்டதை மட்டுமல்ல, நினைத்ததை எல்லாம்
கொடுக்கக் கூடிய கற்பக மரம் கிடைத்ததும், தலை
கால் புரியாமல் மனம் போனபடி வாழ்ந்தார் அரசர்.
–
அரசரைப் பற்றி அறிந்த தத்தாத்திரேயர், ‘தவசீலரான
இந்த அரசன் கற்பக விருட்சத்தை பெற்றதும்,
கடைந்தேறும் வழியைப் பற்றி எண்ணாது, உலக
இச்சைகளில் உழன்று கொண்டிருக்கிறானே…
இவனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும்…’ என
நினைத்தார்.
–
ஒரு நாள், அரண்மனைக்குள் நுழைந்த தத்தாத்திரேயர்,
‘விடு விடு’ வென்று நடந்து போய், அரசருக்கு மட்டுமே
உரித்தான உயர் ரக இருக்கையில் அமர்ந்தார்.
–
சேவகர்களால் அவரைத் தடுக்க முடியவில்லை.
–
தகவல் அறிந்த அரசர் வேகமாக வந்து பார்த்தார்.
‘யார் நீ… என்ன தைரியம் இருந்தால், என் இருக்கையில்
அமர்வாய்… போ வெளியே…’ என்றார்.
–
‘மன்னா… கோபப்படாதே… இந்தச் சத்திரத்தில், நீ தங்கி
இருப்பதைப் போலத் தான், நானும் தங்கியிருக்கிறேன்.
இதற்குப் போய் கோபப்படுகிறாயே…’ என்றார்.
–
‘இது ஒண்ணும் சத்திரமல்ல; என் அரண்மனை. போ
வெளியே…’ என்று கோபத்துடன் கூறினார்.
–
‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இங்கு வசித்து
வருகிறாயோ…’ என்றார் தத்தாத்திரேயர்.
–
‘இல்லை… நான் பிறந்தது முதல், இங்கு தான் வாழ்ந்து
வருகிறேன்…’ என்று மன்னர் சொல்ல, ‘உனக்கு முன்
இங்கு இருந்தது யார்?’ எனக் கேட்டார் தத்தாத்திரேயர்.
–
மன்னர் பொறுமை இழந்து, ‘எனக்கு முன் என் தந்தை;
அவருக்கு முன், என் தாத்தா; அதற்கு முன் என்
கொள்ளுத் தாத்தா… இப்படிப் பல பேர் இங்கு தான்
இருந்திருக்கின்றனர்…’ என்றார்.
–
‘ஆக, இங்கு யாருமே நிரந்தரமாகத் தங்கவில்லை.
ஒருவர் வர, ஒருவர் போக என்று தான் இருந்துள்ளனர்.
அப்படி என்றால், இது சத்திரம் தானே? இதைப் போய்
அரண்மனை என்கிறாயே… அதுவும் உன் அரண்மனை
என்கிறாய். இது எப்படி?” என, அமைதியாக கேட்டார்
தத்தாத்ரேயர்.
–
மன்னருக்கு, ‘சுருக்’கென்றது. தத்தாத்திரேயரின்
திருவடிகளில் விழுந்து வணங்கி, உபதேசம் பெற்று
உயர்ந்தார் அரசர்.
–
நல்லதையே கேட்போம்; நமக்கது உதவும்!
–
———————————–
பி.என்.பரசுராமன்
—-
நல்லதையே கேட்போம்!
Aucun commentaire:
Enregistrer un commentaire