-
-
-
--
பால் மணம்
மாறா வயதில்
பள்ளிக்கு
படை எடுக்கிறோம்!
–
சாட் பூட் த்ரீ
விளையாடும் நேரத்தில்
ஏக், தோ, தீனை
நெட்டுரு செய்கிறோம்!
–
மணல் வீடு கட்டி
விளையாட முடியவில்லை…
‘மவுஸ்’ பிடித்து
மனதை திசை திருப்புகிறோம்!
–
ஒளிந்து பிடித்து விளையாட
ஆசையாய் இருக்கிறது
உடனிருந்து விளையாட
தம்பி, தங்கை இல்லை
தனிமைச் சிறையில்
தத்தளிக்கிறோம்!
–
கல்லா, மண்ணா
விளையாட ஆசை தான்
டவுன்லோடு செய்வதற்கே
நேரம் போதவில்லையே!
–
பாரதி சொன்னதை போல்
மாலை முழுவதும் விளையாட
ஏங்குகிறோம்!
ஆனால்,
‘எக்ஸ்ட்ரா கரிகுலரில்’
எங்களை இழக்கிறோம்!
–
அடுத்த வீட்டு பிள்ளைகளை கூட
அறியவில்லை நாங்கள்
பூட்டிய வீட்டிற்குள்,
‘பத்திரமாக’ இருப்பதால்!
–
கண்ணை விற்று
சித்திரம் வாங்கச் சொல்கிறீர்
சிலந்தி வலையில்
மாட்டிக் கொண்ட
சிறு பூச்சிகளாய்
சிக்கித் தவிக்கிறோம்!
–
இரண்டரை வயது முதல்
இப்படி ஒரு ஓட்டம்
எங்களுக்கு தேவை தானா!
–
உங்களைப் போலவே
உரிய வயதில்
அனைத்தையும் கற்போம்
அதுவரையில்
எங்களைக் கொஞ்சம்
விளையாட விடுங்களேன்!
–
—————————–
— எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.
வாரமலர்
விளையாட விடுங்கள்!
Aucun commentaire:
Enregistrer un commentaire