வண்டுகள் மகரந்த மணங்கமழும் தோட்டத்து
மலரெந்த விதம் நாடுமோ
தண்டைகள் ஒலித்திடும் தெய்வீக மணமுள்ள
தாளிணையை மனம் நாடுமே
விண்ணவர் கோன்மகளை திருப்பரங் குன்றிலே
மணமுடித்து நின்ற குமரா
எண்ணிறந்த கதிரவர்கள் ஒன்று சேர்ந்ததுபோல்
ஒளிவீசி நிற்கும் அமரா
படையெடுத்து வந்தபெருந் தடைகளை வென்றாய்
பதுமனை நீயும் கொன்றாய்
கொடியிலே சேவலாய் காலடியில் ஒருமயிலாய்
கனிவுடன் காத்து நின்றாய்
இடையிலே கண்கவர அணிந்தாய்நீ சிற்றாடை
அதுதங்கம் போல் ஒளிருமே
கடலாடும் செந்தூரை வேல்கொண்டு அரசாளும்
கந்தனே காத்து அருளுமே
பனிரு கைகொண்டு பதினாலு லோகங்கள்
பரிபாலனம் நீ செய்கிறாய்
இனியொரு துன்பமும் எம்மை நெருங்காது
ஏற்பாடு நீ செய்கிறாய்
கனிதர வில்லையென்று கோவித்து கொண்டுநீ
குன்று பழநிக்குச் சென்றாய்
பஞ்சா மிர்தமாய் பார்ப்பவர் கண்ணினிக்கும்
பாலகன் ஆகி நின்றாய்
பிரணவ மந்திரத்தை பிரமனும் மறந்ததால்
பிடித்துச் சிறையில் அடைத்தாய்
குருவாகி சிவனுக்கு சுவாமி மலைதன்னில்
காதிலே பொருளும் உரைத்தாய்
அறுநிலவு ஒன்றுடன் ஒன்று சேர்ந்தாலும்
இதுபோன்ற ஒளியும் இல்லை
திருமுகங்கள் ஆறும் தயவுடனே இருப்பதால்
தமிழுக்குக் குறையும் இல்லை
அரக்கனை அழித்தபின் அமைதி நாடியே
அய்யனே இங்கு வந்தாய்
குறவர்குல வள்ளியை கணபதி துணையோடு
திருமணம் செய்து கொண்டாய்
அருமுகத்தில் கண்கள் ஈராறு உண்டலவோ
எனக்கென்று ஒன்று இலையோ?
திருமகளின் மருமகனே திருவருள் பெட்டகம்
தீர்ந்துதான் போய் விட்டதோ?
சுட்டபழம் கேட்டுநீ தமிழ்கிழவி அவ்வையை
திண்டாடித் திணற வைத்தாய்
பட்டவினை அகன்றிட பழமுதிர் சோலையில்
பரமனே நீயும் அமர்ந்தாய்
கட்டிய மனைவியும் கண்ணனின் குழந்தையும்
குறையொன்றும் இன்றி வாழ
தொட்டுவுன் தாள்களை சிரத்தில் வைத்தேன்
திருக்கண் மலர்ந்து அருளுவாய்
வீயார்
முருகா நீ வரவேண்டும்
Aucun commentaire:
Enregistrer un commentaire