lundi 27 avril 2015

கனவு!

உன்னிடம் பல முறை வந்ததுண்டு.
ஆயினும் உன்னில் தோய்ந்ததில்லை.
ஏன் வரவேண்டுமென நினைத்ததுண்டு.
ஏனோ வராமல் இருக்க முடிந்ததில்லை.

உன் முகத்தைப் பார்ப்பேன் சில நொடிகள்.
விழி மூடுகையில் மனம் பரபரக்கும்.
கண் திறப்பதற்குள் அது பல திசைகள்
சென்றும், சலித்தும் திரும்ப வரும்.

முள் மேலே நிற்பது போல் உடனே
உன் இடம் விட்டு நீங்கிடுவேன்.
மறுபடி வந்தாலும் இந்நிலையே
நீடிக்கும் எனினும் வந்திடுவேன்.

என்றோ எப்போதோ ஒரு நொடியில்,
உனை உணர்வேன் என்பது தெரிகிறது.
ஒருவேளை அது நிகழாவிடினும்
எனை ஏற்பாய் என்றே படுகிறது.

எனக்கென்ன வேண்டும் என்பதனை
என்னாலே சொல்லிட முடியாது.
நீ அறியாதொன்றும் இருப்பதில்லை.
தருவாய். அதில் ஐயம் கிடையாது.

வருவேன் ஒரு நாள் உன்னிடம் நானே .
மீள்வேன் என்னிடம் இருந்தே தானே!
உனை நினைந்தே உருகும் அந்நாளே
என் கனவெனச் சொல்வேன் இந்நாளே!



கனவு!

Aucun commentaire:

Enregistrer un commentaire