mercredi 29 avril 2015

இரண்டிரண்டு!

என்ன? என்ன? எனக் கேட்டவனும் உடன் ஓடி,
ஏன்? ஏன்? எனக் கேட்டவருக்கு ஒன்றும் சொல்லாது
எது? எது? என, தன் வண்டியினை நிறுத்தத்தில் தேடி,
வேகம் வேகமாய் நடந்தும் தன வண்டியைக் காணாது,

மோசம்! மோசம்! என முணுமுணுத்துக் கொண்டவனும்,
அதோ! அதோ! எனக் கூவி, உடன் அவ்விடம் நாடி,
தூரம் தூரமாய் அடி பல வைத்து அடைந்தவனும்,
காதம் காதமாய் நடந்தவன் அலுப்பை உணர்ந்தான்.

சரி! சரி! என தனக்குத் தானே சொல்லிக் கொண்டு
விடுவிடுவென வேகமாக வண்டியினை செலுத்தி,
விழு! விழு! என பச்சைக்கு வேண்டியும் சபித்தும்,
இரு! இரு! என ஒலித்த தன் கைப்பேசியிடம் வேண்டி

ஒருவழியாய் அந்த மருத்துவமனையை அடைந்தான்.
எங்கு? எங்கு? எனத் தன் மனைவி அறையைத் தேடி,
இங்கே! இங்கே! என ஒலித்த மைத்துனனைக் கண்டான்.
அட! அட! என ஒன்றுக்கு பதில் இரண்டு தொட்டில் ஆடி

இருக்கக் கண்டு வியந்தவனை, வாழ்த்துக்கள் கூறி,
அரிது! அரிது! எனத் தொடங்கி மருத்துவரும் சொன்ன
விளக்கத்தைக் கேட்டு, அவர் சென்றவுடன் ஓடி,
மனைவி இருக்குமிடம் சென்றான் தன் விழிகள் மின்ன!



இரண்டிரண்டு!

Aucun commentaire:

Enregistrer un commentaire