என் மனம் இன்று கனத்துக் கிடக்கிறது.
நாம் பேசாத இந்நாட்கள் ஒரு பெருயுகம் போல்
நகராது எனை மேலும் அழுத்துகிறது.
நாம் ஒருசேர பார்த்த இந்த வட்ட நிலா
வானுடன் சேர்ந்து எனைப் பழிக்கிறது.
நட்சத்திரங்கள் புடைசூழ ஒரு வீதியுலா
நிகழ்த்தி, எனை மேலும் துன்புறுத்துகிறது.
நாம் பேசிய சொற்கள் எல்லாம் இன்று,
புவி வட்டப் பாதையில் செயற்கைக் கோளாய்,
எனைச் சுற்றி, ரீங்கரித்தும், பின் சற்றே நின்றும்,
நான் மயங்கி நிற்க, தொடர்கின்றன மெதுவாய்.
நாம் பாராத, பேசாத இப்பொழுதில் தான்,
உன்னை மிகவும் நினைத்துக் கொள்கிறேன்.
கோராததையும் அளிக்கும் அத்தெய்வந்தான்
நமைச் சேர்க்குமென்று இன்னும் நம்புகிறேன்!
வந்து விடு, இன்னும் ஏன் தாமதம் கண்ணே!
சென்று விடும் நாட்கள் நாம் நினைக்கு முன்னே!
வாராது அவை மீண்டும், எவர் விரும்பினாலும்!
போகட்டும்! நாம் இனி சேர்ந்திருப்போம் நாளும்!
போகட்டும்!
Aucun commentaire:
Enregistrer un commentaire