மந்தி போல் தத்தி தாவி தொங்கி திரியும்
நவரசங்களையும் நாள் தவறாது ஏந்தி திரியும்.
அடுத்தவர் என்ன நினைப்பார் என்றே ஏங்கி திரியும்.
உள் ஒன்று வைத்து புறமொன்றில் வேறே பேசித் திரியும்.
ஆசையுடன் சில நேரம் அகம் மகிழ்ந்து திரியும்
ஆணவத்துடன் பலநேரம் ஆரவாரமாய் பேசித் திரியும்.
துக்கமாய் சில நேரம் துவண்டு திரியும்.
திக்கற்ற பறவை போல் பறந்து திரியும்.
கருணையுடன் சில காலம் கலங்கி திரியும்
கடினமாய் பல காலம் கடத்தி திரியும்.
குரோதம் கொண்டு கொலைவெறியோடும் திரியும்
குற்ற உணர்வோடு தன் செய்கைக்காய் வருந்தி திரியும்.
பந்தயமாய் வையகத்தோடு ஓடித் திரியும்
பயத்தோடு வாழ்க்கையை நடத்தி திரியும்
காதலோடு கை கோர்த்து கரைந்து திரியும்
சிருங்காரத்தில் சில நேரம் சிக்கி திரியும்
சிரித்து மகிழ்ந்து சிறகடித்து பறந்து திரியும்
சிந்தனை வசப்பட்டு சீவனுக்குள் சிக்கித் திரியும்
பக்தியில் பரவசமாய் அமிழ்ந்து திரியும்
பரலோகம் காண ஆசை கொண்டும் திரியும்
வடுவுடன் வலிகளை சுமந்து அழுது திரியும்
பிறர் அறியாமல் அதை மறைத்தும் திரியும்
வீரத்துடன் வீராவேசம் காட்டித் திரியும்
வேண்டாமே வம்பு என்று விலகியும் திரியும்.
மனம் எனும் இந்த மந்திர கருவி
சித்தத்தின் வசப்படாத சின்ன குழந்தை
புத்திக்கு அகப்படாத பருவக் குழந்தை.
வயோதிகம் வந்து பக்குவமும் வந்துவிட்டால்
பதியோடு ஒன்றிவிடும் சமத்து குழந்தை
மனம் எனும் மந்திர கருவி.
Aucun commentaire:
Enregistrer un commentaire