பாகமாய்ப் பிரித்துள்ள இத்தொகுப்பின் " தேவ விரதன் " என்ற முதல் பகுதியினை இங்கே தருகிறேன் . ஆதரவிற்கு நன்றி !
வசிஷ்டர் பசுகவர்ந்து சாபம் வாங்கிய
அஷ்டவசுக்களும் தம் பாவம் நீங்கிடக்
கட்டற்றப் பிரவாகியாம் கங்கா தேவியை
மட்டற்றத் துயருடன் அணுகி வணங்கினார் !
தம்மை அண்டியோர் தவறை உணர்ந்தபின்
விம்மும் அவர்கள் நெஞ்சம் ஆறிட
வெம்மை தருமவர் பாவம் யாவையும்
அம்மங்கையாம் கங்கையும் தன்னில் ஏற்கிறாள் !
வசுக்கள் பூமியில் பிறக்க நேர்கையில்
சிசுக்கள் அவர்க்குத் தாயாய் இருந்து
புசிக்கத்தருமுன் அவர் முக்திக்கு வித்திட
வசிக்கும் நிலைவிட்டு மங்கையாய் மாறினாள் !
குருவம்ச அரசனாம் சந்தனு என்பவன்
அருமையானவான், ஒரு அந்திப் பொழுதிலே ,
பெருமை வாய்ந்த அக்கங்கையை மங்கையின்
உருவிலே கண்டான் , காதலும் கொண்டான் !
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கினேன்
ஆதலாலெனை நீ மணப்பதே ஏற்பென
சாதல் இலாதவளை சந்தனு இறைஞ்சினான் !
சாதகச் சூழலை கங்கையும் ஏற்றாள் !
காமத்தின் வசப்பட்ட மன்னனை மணந்திட
தாமரைப் பூவினை ஒத்தவள் தானொரு
சோம ரசத்திலே தோய்த்த வார்த்தையால்
மாமன்னன் தர வரமொன்று யாத்தாள் !
மணமுடித்தப்பின் தான் செய்யும் யாதையும்
கணவன் மறுத்துப் பேசக் கூடாதென்று
கணக்காய் திட்டம் வகுத்துத் தந்தாள்!
பிணக்கை அறியாத மன்னனும் ஒப்பினான் !
அன்பு ,காதல் ,காமப் பித்தம் ,
என்றேதும் தெரியாமல் மனைவியின் சித்தம்
அன்றெதுவோ அதன்படி இராஜனும் வாழ்கையில்
ஈன்றாள் பிள்ளைகள் வரிசையாய் ஏழு !
பிஞ்சுகள் கண் திறக்குமுன்னரே பிறர்
அஞ்சிடும் வஞ்சகக் காரியம் புரிந்தாள் !
வாஞ்சை இலாதவோர் தாயிவள் என்றே
வஞ்சி மக்களை வரிசையாய்க் கொன்றாள் !
கொடிய பாதகம் செய்திடும் மனைவியைச்
சாடவும் அஞ்சி சந்தனு மருகினான் !
ஈடிலா துன்பத்தைத் தாங்கி நின்றான் ,
துடித்தது நெஞ்சம் , வாக்குத் தடுத்தது !
அந்தப் பொழுதிலே எட்டாவதாய் ஒரு
சந்ததித் தரித்ததை அறிந்தான் , பிள்ளை
வந்திடும் காலம் நெருங்கிய நேரம்
வந்தது புத்தி மனைவியைத் தடுத்தான் !
பிறவிப் பெருந்துயர் களைய வேண்டியே
பிறந்த அப்பாலனை நீரில் மூழ்கடிக்கவே
அறிந்திடாத அரசன் அச்செயல் தடுத்து
நிறுத்திப் பறித்தான் குழந்தையைக் காத்தான் !
காரணம் கேட்டக் கணவன் அறிந்திட
மரணம் இல்லாதவள் உண்மை உரைத்தாள் !
பூரணமானது நம் இல்வாழ்க்கையெனச் சிசுவோடு
தோரணை காட்டியே தன்வழி ஏகினாள் !
தேவவிரதன் என்ற கங்கை மைந்தன்
பாவம் நீக்கிடப் பிறவி எடுத்தான் !
ஏவல் செய்திடப் பலரும் இருந்தும்
அவன் காவலாளான கதையும் கூறுவேன் !
அடுத்தது பீஷ்ம சபதம்
Regards,
Pavithra
பிதாமகன் - கவிதைத் தொடர் பகுதி 1
Aucun commentaire:
Enregistrer un commentaire