mercredi 24 juin 2015

தவிப்பும், நிறைவும்!

வான் உடைந்ததோ? என்னும்படி இடி இடிக்க
மானெல்லாம் மிரண்டு மறைவிடங்கள் தேட,
கானெங்கும் நீர் மிகுந்து சிற்றோடை என ஓட
தான் மயங்கி குரங்கெல்லாம் அயர்ந்தே கிடக்க

தேன்குரலெடுத்து பாடும் சிறுகுயில்கள் எல்லாம்
பூங்கிளைக்குள் ஒடுங்கி தான் மறைந்தே கிடக்க,
வான்மேகங்கள் பொருதிய தருணங்கள் எல்லாம்
நீள்சரடாய் ஒளி காட்டி, சீக்கிரமாய் மறைய,

தனித்திருந்தாள் அம்மாதும் அக்காட்டின் ஓரம்.
தவித்திருந்தாள் தலைவனவன் வாராததாலே!
இளைத்திருந்தாள் துணை பிரிந்த பொழுதிருந்து அவளும்.
இணைந்திருந்தால் இருந்திருப்பாள் முழுநிலவைப் போலே!

தொலைவிலவன் தேர் மணியும் இனித்திடவே ஒலிக்க,
விரைவில் அவள் காதுகளை, கண்களுமே சபிக்க,
விடையில் வரும் நாதரையே தன் மனமும் துதிக்க,
தரையிறங்கிய கதிரென அவள் முகமும் பொலிந்திருக்க

காத்திருந்தாள் சிறுபொழுதும் தாங்க முடியாது!
பார்த்திருந்தாள் வாசலினை விழிகளிமைக்காது.
காதலனும் வந்தானே இறுதியில் தவிப்போடு!
பார்த்தவுடன் பொங்கியது அவர் விழி அப்போது!



தவிப்பும், நிறைவும்!

Aucun commentaire:

Enregistrer un commentaire