(கலி விருத்தம்)
கண்ணிழந்தோர் காட்சிக்கு ஏங்குவது போல்
காதடைத்தோர் ஒலிகேட்க ஏங்குவது போல்
கண்மணியே உனக்காக நான் ஏங்குகிறேன்
தண்ணீராய் வந்திடுவாய் தாகம் தீர்ப்பாய்
கதிரவனின் வரவுநோக்கி இரவு ஏங்கிடும்
கள்ளுண்ணும் வண்டுக்காக மலரும் ஏங்கிடும்
நதிவந்து கலந்திடவே கடலும் ஏங்கிடும்
நீவந்து சேர்ந்திடவென் நெஞ்சம் ஏங்குது
புகழுக்கென ஒருபொழுதும் ஏங்கிய தில்லை
பொருளுக்கு என்றும்நான் ஏங்கிய தில்லை
பகலிரவு என்னுளத்தில் ஏக்க முண்டென்றால்
பெண்ணேவுன் காதலுக்கு மட்டும் தானடி
உலகமென்ன சொன்னாலும் கவலை யில்லை
உன்மத்தன் என்றாலும் கவலை யில்லை
கலியுகத்தின் முடிவுக்குப் பின்னாலும் நம்
காதல்மட்டும் வாழுமடி என் காதலியே
வீயார்
உன்னை என்று காண்பேனோ? (கலி விருத்தம்)
Aucun commentaire:
Enregistrer un commentaire