9 படி கொலு.
விதம் விதமாக டிரஸ் பண்ணிக் கொள்ள ஆசை.நீள சடை பின்னி பூ தைத்துக் கொள்ள ரொம்பப் பிடிக்கும்.ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பூ சந்தைக்கு போகவர 5 மைல் நடக்க வேண்டும். 5 ரூபாய்க்குப் பூ வாங்கினால் 2 பேருக்கு பூ தைத்து ஒரு குழந்தைக்குக் கிருஷ்ணர் கொண்டை கட்டலாம். 5ரூபாய்க்கு எங்கே போவது.
அம்மாவுக்குக் குழந்தைகளை திருப்தி பண்ண ஆசை. கால் பரீக்ஷை லீவ் ஆரம்பித்ததுமே பூ தைத்து விடுகிறேன் என்று வாக்களித்து விட்டாள் . எனக்கு ஏக குஷி.3ஆம் நாள் நவராத்திரி அன்று குஞ்சலம் வைத்துப் பின்னி அழகாக சடைப் பின்னலுடன் வீடு வீடு வீடாகப் போய் பாட்டுப் பாடி இரவு 7 மணிக்குக் கோவிலுக்குப் போனோம். அம்மன் திரு உலா. முடிந்ததும் அலமேலு புஷ்பா கச்சேரி.
ஆசையாகக் கச்சேரி கேட்டுக் கொண்டு அப்படியே தூங்கி விட்டேன்.11 மணி சுமாருக்கு அம்மா வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள் . வாசல் திண்ணையிலேயே பாய் கூட விரித்துக் கொள்ளாமல் தூங்கி விட்டேன். 6 மணிக்கு கோலம் போட எழுந்தபோது பார்த்தால் தலையில் பூ வைத்த சுவடே தெரியவில்லை. அழுது கொண்டே அம்மாவிடம் " அம்மா, நீ என் சடைப் பூவை அவிழ்த்து உள்ளே வைத்திருக்கிறாயா? என்றேன்.
" இல்லையே" என்றாள் .
பக்கத்து வீட்டு பாலு சிரித்துக் கோனே உள்ளே வந்தான். உன் சடை என் வயிற்றினுள் இருக்கிறது என்றான். அம்மாவும் கடகட வென்று சிரித்தாள்.எனக்கு கோபம் கோபமாக வந்தது.
பின்பு தான் விஷயம் தெரிந்தது. அம்மாவிடம் பூ வாங்கக் காசு இல்லாததால் 4 அணாவுக்கு 2 படி ஸ்பெஷல் அரிசிப் பொறி வாங்கி 2 நாள் கஷ்டப்பட்டு அட்டையில் மொட்டுக் கோர்ப்பதுபோல் அழகாகக் கோர்த்து நது நடுவே woollen கலர் நூல் வைத்துப் பின்னியிருக்கிறாள்.எனக்கு அப்போதெல்லாம் சூக்ஷ்மம் போதாது.( இப்போது கூடத் தான்). கோவிலில் நான் அயர்ந்து தூங்கியபோது விஷயம் அறிந்த பாலு என் பின்னால் உட்கார்ந்து கொண்டு எல்லாப் பொறியையும் பிய்த்துத் தின்றுவிட்டான்.
நான் ஞே என்று விழித்தேன்.
இருக்கிற காசில் குழந்தைகளை திருப்திப் படுத்திய அம்மாவை இன்று நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது.அவர்கள் குடும்பம் நடத்தும் நேர்த்தியே அலாதிதான்.
இன்று முழம் முப்பது ரூபாய் கொடுத்து தயங்காமல் வாங்கும் நிலை. அன்று சில அணாவுக்கே கணக்கு பார்க்கும் நிலை.
மறு வருடத்திலிருந்து நானே சின்ன குழந்தைகளுக்கு பொறி சடை பின்னுவதைக் கற்றுக் கொண்டுவிட்டேன்.
இப்போதுகூட நவராத்திரி என்றாலே அரிசிப் பொறி நினைவுக்கு வருகிறது.
Jayasala 42
Kolu Memories
Aucun commentaire:
Enregistrer un commentaire