mercredi 27 mai 2015

காலையின் காட்சிகள் !!

நிலவு உலாவிடும் இரவின் மடியிலே ,
கனவு உலாவிடும் விழிகள் வழியிலே !
பகல் குலாவிடும் பரிதிப் பொழுதிலே ,
உணவு தேடியே விடியும் வாழ்க்கையே !

பனி உறங்கிடும் புல்லின் நுனியிலே,
விசும்பின் நீளமும் அடங்கிச் சுருங்குமே !
நனிசெய் பாட்டின் நல்லழகைப் போலவே,
பசும்பொன் ஒத்தப் பொழுதும் புலருமே !

தொலைவில் கேட்டிடும் புட்கள் மொழியிலே,
குயிலின் குரல்வழி நாதம் வழியுமே !
அலையும் மனத்தையே அடக்க மனிதரும்
முயல தவமென இசையும் உதவுமே !

நீர் அளாவிடும் ஆற்றின் கரையிலே,,
மெய் துழாவிடும் காற்றின் குளிர்ச்சியே !
பேரிலாது நாம் ரசிக்கப் பெருகுமே
பொய்யிலாது தான் உணரும் மகிழ்ச்சியே !

தரையில் ஆடிடும் மீன்களாம் அவள்
முகத்தில் கொண்டவிரு கண்கள் காணவே ,
நீரைச் சுமந்தவள் செல்லும் பாதையில் ,
அகத்தில் அன்பொடு அவனும் நிற்கிறான் !

காளை நெஞ்சிலே கோலம் போடவே,
கன்னி வாசலில் நீரும் தெளிக்கிறாள் !
வேளை நெருங்கையில் நாணம் தடுக்கவே,
எண்ணம் யாவையும் நொடியில் மறைக்கிறாள் !

தேன் தடாவிய மலரின் இதழ்வழி
வண்டு பேசிடும் காதல் பொன்மொழி !
கன்றுக் குடித்தப்பின் தனக்குச் சுரப்பதை
யாண்டும் அளித்திடும் ஆவின் பொன்மடி !

உயிர்கள் வாழவே தொண்டு செய்திடும்
பரிந்த மனத்துடன் பயிர்கள் காத்திடும்
உயர்ந்த உழவர்கள் ஏறு பூட்டியே,
பரந்த வயல்வெளி நோக்கி ஏகுவார் !

தொழுகை அர்ச்சனை பிரார்த்தனைகள் என
மனிதன் தன்வழி செய்யும் பக்தியால்
பழுதிலாது அவன் கேட்கும் வரங்களைக்
கனிவுடன் முனிவிலாதவன் அளித்து அருளுவான் !

காலை வேளையில் விரியும் காட்சிகள்
என்றும் பற்பல இருந்தப் போதிலும் ,
சோலைப் பூவிலே வடியும் வாசம்போல்
என்றன் நெஞ்சிலே பதிந்த தெழுதினேன் !!

Regards,

Pavithra



காலையின் காட்சிகள் !!

Aucun commentaire:

Enregistrer un commentaire