vendredi 3 avril 2015

வாழ்த்துக்கள்!

காரிருளில் ஓரகலின் ஒளி துலங்குவதைப் போலே

பாரதனில் உன் புகழும் தனியாகத் தெரியட்டும்!

பாரியவன் பிறவுயிர் மேல் காட்டிய பரிவைப் போலே

ஆரமுதே! உன்னன்பும் அனைத்துயிர்க்கும் பொழியட்டும்!

பிறந்தோம், இருந்தோம், சென்றோம் என இல்லாது,

திகழ்வோம்! எனும் உறுதியுடன் எச்செயலும் புரிந்திடுவாய்!

"மறந்தோமே!" என தனைத் தானே கடியும் நிலை வாராது,

இருந்தோம் எனில் வெற்றி நமதே! இதை உணர்ந்திடுவாய்!


தோல்வியது என்றைக்கு நேர்ந்தாலும் கலங்காதே!

தோள் தளர்ந்து, முகம் வாடி, மூலையில் முடங்காதே!

வாள் நுனி போல் கூர்மையுடன் மறுபடியும் முயன்றிடுவாய்!

வான் மழை போல் வெற்றி வரும்! அனுபவத்தில் கண்டிடுவாய்!


எப்போதும் உன் முகத்தில் புன்னகையும் இருக்கட்டும்!

எந்நிலையில் இருந்தாலும் ஒரு பணிவு வாய்க்கட்டும்!

இன்றே போல் என்றும் உன் வாழ்வும் சிறக்கட்டும்!

மென்மேலும் வெற்றிகளும் உன்னை வந்து சேரட்டும்!


-- ஒரு சிறுமிக்கு தந்தை எழுதிய பிறந்த நாள் வாழ்த்து!






வாழ்த்துக்கள்!

Aucun commentaire:

Enregistrer un commentaire