சுள்ளென அடித்தால்
எழுவேன் என்று,
ஜன்னலில் கீழ் தூங்குவேன்..
விடிந்த சூரியனின் வெப்பத்தை
முதுகில் தாங்கிக்கொண்டு
முகத்தை பார்த்தபடி நீ சிரித்துகொண்டிருக்கிறாய்
நான் தாமதமாய் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும்
துண்டை மறந்துவிட்டேன்..
சோப்பு தீர்ந்துவிட்டது..
ஷாம்பூ பாட்டில் எங்கே..
என கேட்டு,
குளியலறையில் உன்னை
நனையவைப்பதால்,
நம் வீட்டில் இப்பொழுது தண்ணீருக்கு கொஞ்சம் பஞ்சமாம்..
சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு
வீட்டை விட்டு வெளியே வந்தாலும்
ஒவ்வொரு அடிக்கும் திரும்பி பார்த்து கையசைக்கிறேன்
தெருவின் முனையை தாண்டியபின்,
உன்னை மறைக்கும் அந்த கட்டிடத்தை,
கெட்ட வார்த்தைகளால் சபிக்கிறேன்
ஆறு மணிக்கு மேல்
அலுவலகத்தில் இருக்கும்
ஒவ்வொரு ஐந்து நொடிக்கும்
உன்னிடம் அர்ச்சனை வாங்குகிறேன்,
இதோ இதோ என்று ஒருவழியாய்
வீடு வந்தபின்,
கதவில் உன் புன்னகையை கண்டு வியக்கிறேன்..
அடுப்பின் முன் நிற்கும் உன்னை
இழுத்து அணைத்து இம்சிக்கிறேன்,
கரண்டியை காட்டி
மிரட்டும் உன் அழகில் பயந்து
மீண்டும் உன் மீதே விழுகிறேன்
மடி மீது நீ அமர்ந்து
விரல் நீட்டி, ஊட்டி விடுவதால்
உன் சமையலின் உண்மையான ருசியை
இன்றும் உணராமல் தவிக்கிறேன்
விளக்குகள் அணைந்த இருட்டில்
உன் விழிகளை மட்டும் இனம் காண்கிறேன்
எத்தனை தான் குளிர் அடித்தாலும்
உன் இறுக்கத்திலே இதம் காண்கிறேன்
_______________________________________________
அழகான கவிதை கேட்டாய்,
நீ என்றேன்..
அதை விட அழாகாய் கேட்டாய்..
நம் பிள்ளை என்றேன்..
'அழகான கவிதை,
என்னை விட அழகாய்,
அவனை தவிர்த்து'
என கேட்டாய்..
சற்று நேரம் யோசித்து,
ஒரு பத்து மாதம் பொறுத்துக்கொள் என்றேன் :)
கதையாய் ஒரு கவிதை
Aucun commentaire:
Enregistrer un commentaire